Published : 20 Jul 2025 08:57 AM
Last Updated : 20 Jul 2025 08:57 AM
மூலவர்: அனந்தீஸ்வரர் அம்பாள்: சவுந்தரநாயகி தல வரலாறு: பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகா விஷ்ணுவின் எடை வழக்கத்தைவிட அதிகமாகத் தெரிந்தால், அதற்காக காரணத்தை கேட்டார் ஆதிசேஷன். அவர் சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகம் தெரிந்ததாகக் கூறினார் விஷ்ணு. ஆதிசேஷன் தனக்கு அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி. விஷ்ணுவை வேண்டினார். அவர் பூலோகத்தில் சிதம்பரம் சென்று, வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட்டால், அந்த தரிசனம் கிடைக்கும் என்றார். அதன்படி ஆதிசேஷன் பூலோகத்தில் அத்ரி மகரிஷி - அனுசுயா தம்பதியின் மகனாக அவதரித்தார். பதஞ்சலி (அனந்தன்) என பெயர் பெற்றார்.
தில்லை வனத்தில் தங்கி, தீர்த்தம் உண்டாக்கி அதன் கரையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். சிதம்பரம் நடராஜரின் தரிசனமும் கிடைக்கப் பெற்றார். இதனால் ஈசன் ‘அனந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
கோயில் சிறப்பு : யோக சூத்திரத்தை எழுதிய பதஞ்சலி மகரிஷிக்கு இங்கு தனிசந்நிதி உள்ளது. ராமாவதாரத்தில் லட்சுமணராக அவதாரம் செய்தவர் பதஞ்சலி என்பதால் பூச நட்சத்திரத்தில் விசேஷ பூஜை நடக்கிறது. மார்கழி திருவாதிரையன்று நடராஜருடன் பதஞ்சலி மகரிஷியும் புறப்பாடாவார்.
சிறப்பு அம்சம் : கோயிலுக்குள் நுழைந்ததும் பதஞ்சலி தீர்த்தம் உள்ளது. பிரகாரத்தில் அருகருகே சூரியன், சந்திரன் உள்ளனர். எனவே, இத்தலத்தை நித்ய அமாவாசை தலமாக கருதுகின்றனர். அனைத்து ரிஷிகளும் இத்தலத்தில் நடக்கும் உச்சிகால பூஜையிலும் நடராஜர் கோயில் நடக்கும் அர்த்தஜாம பூஜை
யிலும் கலந்து கொள்வதாக ஐதீகம். அதனால் உச்சிகாலத்தில் இத்தலத்தையும், அர்த்தஜாமத்தில் சிதம்பரம் நடராஜரையும் தரிசிப்பது விசேஷம். நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் தோஷம் நீங்க, யோகாசனம் உள்ளிட்ட கலைகளில் சிறந்த இடம் பெற பதஞ்சலியை வணங்குகின்றனர்.
அமைவிடம் : சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறம் மேற்கு திசையில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6-11.30, மாலை 5-8.30 மணி வரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT