Published : 19 Jul 2025 06:24 PM
Last Updated : 19 Jul 2025 06:24 PM
ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடித் திருக்கல்யாண நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டுக்கான ஆடித்திருக் கல்யாண விழா கொடியேற்றத்துடன் ஜுலை 18 தொடங்கி ஆகஸ்ட் 4 வரையிலும் 17 நாட்கள் நடைபெறுகிறது.
ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் முதல் நாளான சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. சாயரட்சை பூஜை, கால பூஜைகளுக்கு பின்னர் ராமேசுவரம் கோயில் யானை ராமலட்சுமி நான்கு ரத வீதிகளில் கொடியுடன் வலம் வந்தது.
காலை 10.30 மணிக்கு மேல் பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாள் மண்டபத்தில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கன்னி லக்னத்தில் வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்று ஆடித் திருக்கல்யாணத் திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை இரவு 8 மணியளவில் நாயகர்வாசலில் தீபாராதனை முடிந்து பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்னவாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சி நிரல்: ஜுலை 24 வியாழக்கிழமை ஆடி அமாவாசை, ஜுலை 27 ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம், ஜுலை 29 செவ்வாய்கிழமை ஆடிதபசு, ஜுலை 30 புதன்கிழமை திருக்கல்யாணம், ஆகஸ்ட் 4 திங்கட்கிழமை கெந்தனமாதன பர்வதம் மண்டபகப்படிக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT