Published : 18 Jul 2025 02:00 PM
Last Updated : 18 Jul 2025 02:00 PM

தி.மலை கோயிலில் பிரேக் தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: சேகர்பாபு தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்து பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அண்ணாமலையார் கோயில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பவுர்ணமி நாட்களிலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதலாவதாக பிரேக் தரிசன முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக கோயில் சிவாச்சாரியார்களுடன் இணைந்து தரிசன நேரத்தை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரூ.50 தரிசன கட்டணத்தை ரூ.100 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவரிசையின் நீளத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களை ஒருங்கிணைக்க ஒரு மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கவும், அதேபோல் கோயிலில் அனைவரையும் ஒருங்கிணைக்க ஒரு மக்கள் தொடர்பு அதிகாரியை நியமிக்கவும் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை வழங்கியுள்ளார். இது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த கோயிலுக்கு கூடுதல் வசதிகளை மேம்படுத்த ரூ.200 கோடியில் பெரும் திட்ட வரைவு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் கைபேசி கொண்டு செல்வதை தடை செய்வது குறித்து விரைவில் ஆலோசனை செய்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். சுவாமி தரிசனம் செய்வதில் உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள் என பாகுபாடு காட்ட வேண்டாம். உள்ளூர் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

அறங்காவலர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலித்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இந்து சமய அறநிலைய துறை சார்பில் கூடுதல் துணை ஆணையர் உள்பட கோயிலுக்கு தேவையான அனைத்து பணியாளர்களையும் காலி பணியிடங்கள் இல்லாமல் நிரப்பப்படும். கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை 3 மாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும்" என்றார்.

இக்கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமை செயலாளர் க.மணிவாசன், அறநிலைய துறை ஆணையர் பி.என்.தரன், மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அதிகாரி ராம்பிரதீபன், அண்ணாமலையார் கோயில் ஆணையர் பரணிதரன், திட்ட இயக்குநர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x