Published : 14 Jul 2025 12:16 PM
Last Updated : 14 Jul 2025 12:16 PM

ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பின் இன்று காலை 5.55 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை உச்சியில் உள்ள நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த திருப்பதி சீனிவாச பெருமாள், இந்த மலையிலேயே தங்கியதாக கருதப்படுவதால் இக்கோயில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் கடந்த 1989-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் கும்பாபிஷேகம் செய்வதற்காக கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கியது. முழுவதும் உபயதாரர் நிதியில் பெருமாள் சந்நிதி உட்பிரகார தரைத்தளத்தில் கற்கள் பதித்தல், கோபுரத்தில் வர்ணம் பூசுதல், அன்னதான கூடன் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றது. ஜூலை 3-ம் தேதி முதல் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கருவறை திருப்பணிகள் தொடங்கியது.

ஜூலை 12-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. திங்கள் கிழமை காலை 3 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி, புண்யகாவாசனம், காலசந்தி பூஜை, அக்னி ஆராதனம், மூர்த்தி ஹோமங்கள் நடைபெற்றது. காலை 5.15 மணிக்கு கடம் புறப்பாடு ஆனது. அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா கொடியசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார்.

காலை 5.55 மணிக்கு பெருமாள் சந்நிதி விமானம், சாள கோபுரம், ரமார் பாதம் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 6.15 மணிக்கு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x