Published : 14 Jul 2025 12:40 AM
Last Updated : 14 Jul 2025 12:40 AM
மதுரை: முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உபயதாரர் மூலம் ரூ.70 லட்சத்தில்ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.2.44 கோடியில் ராஜகோபுரத்தில் 7 தங்க கலசம், அம்பாள் சந்நிதி மற்றும் கணபதி கோயிலில் தலா ஒரு கலசம் என 9 கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோயிலின் வள்ளி தேவசேனா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் கடந்த 10-ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் வரை 5 கால பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று நடந்த 6, 7-ம் கால யாகசாலை பூஜையில் உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், ஜோதிடர் கே.பி.வித்யாதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 80 ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அனுபூதி முற்றோதல் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் பரிவார மூர்த்திகளுடன் நேற்று இரவு 10 மணி அளவில் புறப்பட்டனர். திருப்பரங்குன்றம் வந்தடைந்த அவர்களுக்கு 16 கால் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று அதிகாலை 3.45 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், அதை தொடர்ந்து 5.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள், விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். 6 மணிக்கு தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.
10 ட்ரோன்கள் மூலம் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சிரமமின்றி கும்பாபிஷேகத்தை காண, கோயிலை சுற்றி பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT