Published : 08 Jul 2025 05:39 AM
Last Updated : 08 Jul 2025 05:39 AM
காரைக்கால்: காரைக்காலில் ஆண்டுதோறும் நடைபெறும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா இன்று (ஜூலை 8) மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்குகிறது. 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில், அம்மையார் வரலாற்றை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் இவ்விழா இன்று (ஜூலை 8) மாலை பரமதத்தர் அழைப்பு (மாப்பிள்ளை அழைப்பு) வைபவத்துடன் தொடங்குகிறது. நாளை காலை பரமதத்தர் - புனிதவதியார் திருக்கல்யாணம், மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு, 10-ம் தேதி அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், காலை பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா (மாங்கனிகளை வாரி இறைத்து வழிபடுதல்), மாலை அமுது படையல், 11-ம் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சிக் கொடுக்கும் நிகழ்வு ஆகியவை நடைபெற உள்ளன. ஆக.8-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறும்.
விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான சுகாதார வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் தலைமையில் நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT