Published : 07 Jul 2025 05:45 PM
Last Updated : 07 Jul 2025 05:45 PM
புதுச்சேரி: 85 ஆண்டுகளுக்குப் பின்னர் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் நடந்தது. புதுவை கருவடிகுப்பத்தில் உள்ள சுடுகாட்டில் அரிச்சந்திர மகாராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலில், 1800-ம் ஆண்டில் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு, 1940-ம் ஆண்டு 2-வது கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்த நிலையில், 85 ஆண்டுகளுக்குப் பிறகு, கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ரா மகரிஷி, மகாகால ருத்ர பைரவர், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமிகளுக்கு இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார் பக்தர்கள் திருக்கூட்டத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ் வழியில் இந்நிகழ்வு நடந்தது. கைலாய இசைக்குழுவின் இசை நிகழ்வுகளும் நடந்தது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்த ஓம் நந்தீஸ்வரன் அன்னதான அறக்கட்டளை நிறுவனரும் ஆலய பரிபாலகருமான ரவி கூறுகையில், "கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் முயற்சி செய்து கும்பாபிஷேகத்தை இறைவனின் வழியால் நடத்தினோம்" என்று குறிப்பிட்டார். சிவனடியார்கள் கூறுகையில், "கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோயில் அருகேயுள்ள இடுகாட்டின் முகப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT