Published : 07 Jul 2025 08:14 AM
Last Updated : 07 Jul 2025 08:14 AM

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...’ - திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 7) காலை கோலாகலமாக நடந்தது. இதை நேரில் காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷங்களை முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடிக்கு கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 26-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின. கடந்த 1-ம் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

கரியமாணிக்க விநாயகர், பார்வதி அம்மன், மூலவர், வள்ளி, தெய்வானைக்கு கோயில் உள்புறம் தந்திரி சுப்பிரமணியரு தலைமையிலும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பிரமாண்ட யாகசாலையில் 71 ஓம குண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் செல்வம் சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் ராஜா சிவாச்சாரியார் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர். கடந்த சனிக்கிழமை மாலை முதல் திருக்கல்யாண மண்டபத்தில் பெருமாளுக்கு தனியாக 5 ஓம குண்டங்கள் வைத்து பட்டாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு கும்பங்கள் எடுத்து கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காலை 6.22 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

ராஜகோபுரம் கலசங்கள், மூலவர், வள்ளி, தெய்வானை கலசங்களுக்கு தந்திரி மற்றும் போத்திகளும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்தி கலசங்களுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்களும் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். இதில் ராஜகோபுரத்துக்கு மட்டும் தங்க குடத்தில் புனித நீர் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் 20 பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம் - மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாரதி தீர்த்த மகா சன்னிதானம், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், கந்தபுரி ஆதீனம் வாமதேவ ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோயில் தக்கார் அருள்முருகன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.

கோயில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். மேலும், கும்பாபிஷேகத்தை தங்குதடையின்றி பக்தர்கள் காண்பதற்கு வசதியாக நகர் முழுவதும் முக்கிய பகுதிகளில் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. மாநில சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையில் சுமார் 6000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x