Published : 29 Jun 2025 05:06 PM
Last Updated : 29 Jun 2025 05:06 PM

பழநி கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

பழநி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் அர.சக்கரபாணி.

திண்டுக்கல்: பழநி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 29) துவக்கிவைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் மூலம் ஓராண்டிற்கு 20 லட்சம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பக்தர்களின் நலன் கருதி, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கிட முடிவு செய்து 2025 -2026ம் ஆண்டு சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் சேகர்பாபு, “கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் தற்போது 25 திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இவ்வாண்டு மேலும் 5 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.” என அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பழநி மலைக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்தார். மலைக்கோயில் வெளிப்பிரகார திருக்கல்யாண மண்டபத்தில் நாள்தோறும் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 6,000 பக்தர்களுக்கும், விஷேச நாட்களில் 10,000 பக்தர்களும் பாக்கு மட்டை தட்டில் வைத்து பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 25 லட்சம் பக்தர்கள் பயனடைவர். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x