Published : 24 Jun 2025 05:36 AM
Last Updated : 24 Jun 2025 05:36 AM
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான இலவச ஆன்மிக பயணம் 5 கட்டங்களாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள், அறுபடை வீடு முருகன் கோயில்கள், அடி மாத அம்மன் கோயில்கள், புரட்டாசி மாத வைணவக் கோயில்களுக்கு இலவசமாக ஆன்மிக பயணம் சிறப்பு பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர். அந்தவகையில், இந்த ஆண்டு ஆடி மாத அம்மன் கோயில்களுக்கான ஆன்மிக பயணம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக ஜூலை 18-ம் தேதியும், 2-ம் கட்டமாக ஜூலை 25-ம் தேதியும், 3-ம் கட்டமாக ஆக. 1-ம் தேதியும், 4-ம் கட்டமாக ஆக. 8-ம் தேதியும், 5-ம் கட்டமாக ஆக. 15-ம் தேதியும் அழைத்து செல்லப்பட உள்ளனர். முதல் கட்ட ஆன்மிக பயணம் செல்வோர் விண்ணப்பிக்க ஜூலை 11-ம் தேதி கடைசி நாளாகும். அதேபோல், 2-ம் கட்டத்துக்கு ஜூலை 18-ம் தேதியும், மூன்றாம் கட்டத்துக்கு ஜூலை 25-ம் தேதியும், நான்காம் கட்டத்துக்கு ஆக.1-ம் தேதியும், 5-ம் கட்டத்துக்கு ஆக.8-ம் தேதியும் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்களாகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், அதற்கான வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்க வேண்டும் எனவும் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து மட்டுமே ஆன்மிக பயணம் தொடங்கப்பட உள்ளது.
எனவே, விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத் துறை இணையதள பக்கத்தில் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்த பின், மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT