Published : 19 Jun 2025 06:18 AM
Last Updated : 19 Jun 2025 06:18 AM

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய நிறுவனங்கள் தொடக்கம்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்

மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் புதிய கல்வி நிறுவனங்களை  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று தொடங்கி வைத்தார். உடன் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி, பிரத்யக் ஷா அறக்கட்டளை அறங்காவலர் ஜெயராம கிருஷ்ணன், சம்ஸ்கிருத கல்லூரியின் தலைவர் சந்தானகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோர். படம்: எஸ். சத்தியசீலன்

சென்னை: வேத பாடசாலை, பாரதிய வித்யாலயா தொடக்கப் பள்ளி உட்பட சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய நிறுவனங்களை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள சென்னை சம்ஸ்கிருத கல்லூரியை விரிவாக்கம் செய்யும் வகையில், பாரதிய மேம்பாட்டு மையம் சார்பில், ‘ராமரத்னம் பாரதிய வித்யாலயா’ தொடக்க பள்ளி, ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி வேத பாடசாலை’, தகுதியுள்ள அறிஞர்களை கண்டறிந்து அவர்களை சிறந்த அறிஞர்களாக உருவாக்க ‘கிருஷ்ணசாமி ஐயர் சாஸ்திர வாரிதி’ நிறுவனம், சைவத்தின் புனித மரபுகளை நிறுத்த ‘சைவ ஆகமத்துறை’ எனும் புதிய துறை ஆகிய 4 நிறுவனங்கள் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிறுவனங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் விழாவுக்கு தலைமை வகித்து, புதிய நிறுவனங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: சென்னை சம்ஸ்கிருத கல்லூரி எந்த உத்தேசத்துக்காக தொடங்கப்பட்டதோ, அந்த ரீதியிலேயே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சாஸ்திரங்களை சாஸ்திரியமான முறையில் காப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாகும். இந்த மாதிரியான சங்கல்பம் என்பது இன்றைய காலத்தில் தேவை. சக்தி என்பது மக்களிடம் இருக்கிறது. ஆனால், சங்கல்ப சக்தி என்பது மக்களுக்கு தேவைப்படுகிறது. அந்த ரீதியில் இது ஒரு நல்ல முயற்சியாகும்.

மயிலாப்பூருக்கு என சில அடையாளங்கள் உண்டு. அதில் ஒன்று இங்குள்ள வீடுகளின் பெயர்கள் இன்றைக்கும் பழைய சம்ஸ்கிருத மொழியிலே இருக்கும். அதை பார்த்தாலே தெரிந்துக் கொள்ளலாம் நாம் மயிலாப்பூருக்கு வந்துவிட்டோம் என்று. அந்தளவுக்கு சம்ஸ்கிருத மொழி உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. தமிழ் பிரதானமான மொழியாக இருக்கும் தமிழகத்தில், சம்ஸ்கிருதம் என்கிற மொழியை காப்பாற்றுவதற்காக நம் சமுதாய மக்கள் அதிகளவில் முயற்சி எடுத்து இருக்கின்றனர்.

இந்த நூற்றாண்டில் வேதத்தை ஆச்சாரத்தோடு சேர்ந்து பல குடும்பங்களில் பார்க்க முடிகிறது என்றால், அது ஆசீர்வாதம் தான். இத்தகைய சிறப்பு அம்சங்களை கொண்ட மயிலாப்பூரை அதற்குரிய முறையில் காப்பாற்ற வேண்டியது பக்தர்களின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் என்.கோபாலசுவாமி, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் பிரத்யக்ஷா அறக்கட்டளை அறங்காவலர் ஜெயராம கிருஷ்ணன், சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் தலைவர் சந்தான கிருஷ்ணன், செயலர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x