Published : 17 Jun 2025 07:08 PM
Last Updated : 17 Jun 2025 07:08 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. யாகசாலை பூஜை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடமுழுக்கு விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், வாகன நிறுத்துமிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக செய்து கொடுக்க வேண்டும். பக்தர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு எம்.பி., சட்டப்பேரவை தலைவர் மற்றும் அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கான யாகசாலை பூஜை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரியும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.ஜே. நகர் பகுதியில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை அவர்கள் பார்வையிட்டனர்.
தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் பக்தர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு, சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த பகுதியில் உள்ள மிகைநீர் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரப்பாலம் அமைக்கப் படவுள்ள இடத்தையும் அவர்கள் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
ஆய்வின்போது நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் கிரண் குர்லா, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி. சண்முகையா ( ஓட்டப்பிடாரம் ), மு.அப்துல் வகாப் ( பாளையங்கோட்டை ), தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் லி.மது பாலன், கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி ) ஆர்.ஐஸ்வர்யா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் விஜயலட்சுமி, திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவ ஆனந்தி, துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், நகராட்சி ஆணையர்கள் கண் மணி ( திருச்செந்தூர் ), குமார் சிங் ( காயல்பட்டினம் ), திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT