Published : 12 Jun 2025 07:41 AM
Last Updated : 12 Jun 2025 07:41 AM
திருப்பதி: காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ‘தி இந்து’ குழுமத்தின் பங்கு அளப்பரியது என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டியுள்ளார்.
‘தி இந்து’ பதிப்பக குழுமம் சார்பில் ‘உண்மையின் அவதாரம் - காஞ்சி மகாஸ்வாமி’ நூல் வெளியீட்டு விழா, காஞ்சி சங்கர மடத்தின் திருப்பதி கிளையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்நூலை காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தின் (திருப்பதி) முதுநிலை பேராசிரியர் தேவநாதாச்சாரியார் பெற்றுக் கொண்டார். நூலின் இரண்டாவது பிரதியை இன்டக்ரேட்டட் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் பி.வைத்யநாதன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கிய அனுக்கிரக பாஷணம்: காஞ்சி மகாஸ்வாமியின் வாழ்க்கை சரித்திரம் குறித்த நூலை இரண்டு தொகுதிகளாக, ‘தி இந்து’ குழுமம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலத்தில் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, தற்போது அந்த நூலின் தமிழ் பதிப்பை வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
காஞ்சி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பட்டமேற்றது முதல் அவரது விஜய யாத்திரை, யாத்திரைகளின்போது அவரது செயல்பாடுகள், திட்டங்கள், அவரது முகாம்களில் நடைபெற்ற நிகழ்வுகள், சொற்பொழிவுகள், பல்வேறு இடங்களில் அவருக்கு கிடைத்த வரவேற்பு குறித்து, ‘தி இந்து’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்திகள், வெளிவந்த புகைப்படங்கள் ஆகியவற்றைத் தொகுத்து ‘தி இந்து’ பதிப்பக குழுமம் சார்பில் ‘உண்மையின் அவதாரம் - காஞ்சி மகாஸ்வாமி’ என்ற நூல் தற்போது 2 தொகுதிகளாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலில் கூடுதலாக மகாஸ்வாமி குறித்து என்னுடைய அனுபவங்களும், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் பீடாரோஹண நிகழ்வு செய்திகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
சங்கர மடத்துக்கு நெருங்கிய தொடர்பு: காஞ்சி சங்கர மடத்துக்கும், ‘தி இந்து’ குழுமத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காஞ்சி மகாஸ்வாமி ‘தி இந்து’ அலுவலகத்துக்கு விஜயம் செய்து ஊழியர்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். மகாஸ்வாமியின் சென்னை விஜயத்தின்போது, ‘தி இந்து’ குழுமம் சிறப்பு வரவேற்பு அளித்து, தங்குவதற்கு மிகச் சிறந்த ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளது.
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சென்னை விஜயத்தின்போது, கஸ்தூரி & சன்ஸ் சீனிவாசன் குடும்பத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். அவர்களின் இல்லத்தில் இருந்து, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பட்டினப்பிரவேச பல்லக்கில் ஏற்றி மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மகாஸ்வாமி சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 1957-ம் ஆண்டு காலகட்டத்தில் பக்தர்கள் மத்தியில் ஆற்றிய உபதேச மொழி களை ஆவணப்படுத்தும் விதமாக ஆச்சாரியரின் அழைப்பு (ACHARYA’S CALL) நூல்களையும் ‘தி இந்து’ குழுமத்தினர் வெளியிட்டுள்ளனர். காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ‘தி இந்து’ குழுமத்தின் பங்கு அளப்பரியது. ‘தி இந்து’ குழுமத்தின் தமிழ் பிரிவு ‘இந்து தமிழ் திசை’யும் சிறப்பான பணிகளை செய்து வருகிறது.
இந்த நூலை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட கஸ்தூரி & சன்ஸ் குடும்பத்தினர், ‘தி இந்து’ பதிப்பக குழுமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் அனைத்து நலன்களும் கிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் அருள்புரிவாள். இவ்வாறு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கினார்.
முன்னதாக, இந்த நூலின் பிரதிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருப்பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் ஆதிசங்கரர் சந்நிதியில் வைத்தும், காஞ்சி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில் வைத்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நூலின் விலை (2 தொகுதிகளையும் சேர்த்து) ரூ. 799. தற்போது 25 % தள்ளுபடி விலையில் ரூ.599-க்கு பெற்றுக் கொள்ளலாம். இந்நூலை பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய லிங்க் >>publications.thehindugroup.com/bookstore மொத்தமாக வாங்க விரும்புபவர்கள் bookstore@thehindu.co.in என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 18001021878 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT