Published : 22 May 2025 06:41 AM
Last Updated : 22 May 2025 06:41 AM
உத்தராகண்டில் இருந்து ரா.விவிதா ராஜி
ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று அம்மாநில அரசின் சுற்றுலா துறை கூடுதல் செயலாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
தேவ பூமியாக உத்தராகண்ட் மாநிலம் போற்றப்படுகிறது. பஞ்ச பிரயாகையில் (நந்தப் பிரயாகை, தேவப் பிரயாகை, ருத்ர பிரயாகை, கர்ணப் பிரயாகை, விஷ்ணுப் பிரயாகை) ஒன்றான ருத்ரப் பிரயாகையில் அலக்நந்தா நதியும் மந்தாகினி நதியும் சங்கமமாகின்றன. ருத்ரப் பிரயாகையில் கடல் மட்டத்தில் இருந்து 3,050 மீட்டர் உயரத்தில் கார்த்திக் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சிலிர்க்க வைக்கும் சீதோஷ்ண நிலை, கரடு முரடான பாதை, வழி நெடுகிலும் மரங்கள், கொஞ்சம் அசந்தாலும் வழுக்கி விடும் பாறைகள் என்ற நிலையைக் கடந்து முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கு, இக்கோயில் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக உத்தராகண்ட் மாநில அரசு பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் முருகப் பெருமானுக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்துச் செல்கின்றனர். இந்த ஆண்டும் ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயிலில், முருகப் பெருமானுக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பல ஆதின குருநாதர்கள், உத்தராகண்ட் மாநில அரசின் சுற்றுலாத் துறை கூடுதல் செயலாளர் ரவிசங்கர், பத்ம டிரம்ஸ் சிவமணி, மாண்டலின் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உத்தராகண்ட் அரசின் சுற்றுலா துறையின் கூடுதல் செயலாளர் ரவி சங்கர் பேசும்போது, “கடந்த 3 வருடங்களாக இக்கோயிலில் இருந்து புனித வஸ்திரங்களை கொண்டு சென்று தமிழ்நாட்டில் உள்ள முருகர் கோயிலில் சாற்றப்பட்டு வருவது சிறப்பு. இலங்கையில் 3 கோயில்களின் வஸ்திரங்கள், ஒரு கோயிலில் இருந்து வேலும் எடுத்து வந்து, ருத்ரபிரயாகை கார்த்திக் சுவாமி கோயிலில் பூஜை செய்யப்படுகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்திருக்கிறது. பக்தர்களுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன” என்றார். இந்நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
டேராடூன் விமான நிலையத்தில் இருந்து 150 கிமீ மலைப் பாதையைக் கடந்து சென்றால் ருத்ரபிரயாக் நகரத்தை அடையலாம். அங்கிருந்து 40 கிமீ மலை மார்க்கமாக பயணித்து கனக்சவுரி கிராமத்தை அடைந்து அங்கிருந்து 3.5 கிமீ மலையேறிச் செல்ல வேண்டும். பின்னர் அரை கிமீ தூரத்துக்கு 400 செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறி மலை உச்சியை அடைந்தால், கார்த்திக் சுவாமியை தரிசித்து அருள்பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT