Published : 21 Apr 2025 04:49 PM
Last Updated : 21 Apr 2025 04:49 PM

மதுரை சித்திரைத் திருவிழா 2025 - ஏற்பாடுகள் எப்படி?

கோப்புப் படம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் கோயிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் உலா வரும் இடங்களையும், அம்மன், சுவாமி உலா வரும் இடங்களையும் எளிதில் கண்டறிய, ஜிபிஎஸ் செயலியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் 29-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நடந்த அனைத்து நாட்களிலும் 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாகவும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 30 லட்சமாக உயரும் என மாநகராட்சி கணித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நெரிசலால் தொடரும் பக்தர்கள் உயிரிழப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டிராக் அழகர்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரைத் திருவிழாவின்போது, மாவட்டக் காவல் துறை கண்காணிப் பாளராக இருந்த மணிவண்ணன், தனது சொந்த முயற்சியில், மதுரை காவலன் என்ற மொபைல் செயலியில், கள்ளழகரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள வசதியாக “டிராக் அழகர்” ஜிபிஎஸ் வசதியை செயல்படுத்தினார். அவரது இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததோடு, இச்செயலியை ஏராளமானோர் தங்களது மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்து கள்ளழகரை தேடி அலையாமல், திட்டமிட்டு மிக எளிதாக சுவாமி தரிசனம் செய்தனர்.

அதனால், பக்தர்கள் கள்ளழகரின் தரிசனத்துக்காக தேவையில்லாமல் சாலைகளில் காத்து கிடப்பது, போக்குவரத்து நெரிசல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவை தவிர்க்கப்பட்டது. வாகன ஓட்டிகளும் இந்த செயலியை பார்த்து கள்ளழகர் வரும் சாலைகளில் செல்வதை தவிர்த்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மாற்று வழியில் செல்ல உதவியாக இருந்தது.

இச்செயலியின் மூலம் கள்ளழகர் இருப்பிடத்தை அறிவதுபோல், அம்மன், சுவாமி வீதியுலா, தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஜிபிஎஸ் செயலியை செயல்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால், அந்த ஏற்பாடுகளை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும், மாநகர காவல்துறையும் முன்னெடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் உலாவுக்குக்கூட ஜிபிஎஸ் செயலி திட்டத்தை மாவட்ட காவல்துறை செயல்படுத்தவில்லை. அதனால், கள்ளழகரை பார்க்க பக்தர்கள், வழக்கம்போல் சாலைகளில் அவர் வரும் வழித்தடம், இருப்பிடம் தெரியாமல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. திடீர் திடீரென திருப்பிவிடப்பட்ட போக்குவரத்தால் வாகன ஓட்டிகளும் பரிதவித்தனர்.

நெரிசலை தவிர்க்கலாம்: இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சித்திரை திருவிழாவின் போது, கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு வரும் போதும், எதிர்சேவை முடிந்து திரும்பி செல்லும்போதும் வழிநெடுக மண்டகப் படிகளில் மதுரை மட்டுமில்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் மக்கள் குடும்பத்தோடு திரண்டு வருவார்கள்.

அவர்கள், ஆங்காங்கே மண்டகப்படி சாலைகளில் நின்றபடியே கள்ளழகர் தரிசனத்துக்காக காத்திருப்பார்கள். மதுரை காவலன் என்ற மொபைல் செயலி இருந்தபோது கள்ளழகரை மிக எளிதாக கண்டுகளித்தோம். கடந்த திருவிழாவில் அந்த செயலி செயல்படுத்தப்படாததால் மிகுந்த சிரமம் அடைந்தோம்.

நாள்தோறும் வீதி உலா: சித்திரை திருவிழாவின்போது நாள்தோறும் அம்மன் மற்றும் சுவாமி ஆகியோர் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளையும், வில்லாபுரம் பாகற்காய் மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கும் வீதி உலா செல்வது வழக்கம். அம்மன் உலா சென்று திரும்ப சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. தவிர ஒவ்வொரு நாள் விழா நிகழ்வுகளைப் பொருத்து சுவாமி புறப்படும் நேரமும், உலா நேரமும் மாறுபடும்.

எனவே, கள்ளழகரையும், அம்மன் உலாவையும் எளிமையாக பக்தர்கள் காண்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் செயலியை செயல்படுத்த வேண்டும். அம்மன் மற்றும் சுவாமி வீதி உலா நேரங்களில் மாசி வீதிகள் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதை குறைக்கலாம்.

மேலும் புறநகர் பகுதிகளிலிருந்து வீதி உலாவைக் காண வருபவர்கள் அம்மன், சுவாமி இருக்குமிடத்தை துல்லியமாக தெரிந்துகொண்டு தங்களுக்கு வசதியான இடத்தில் தரிசனம் செய்ய முடியும். இதனால் தாமதமாக வந்து தரிசனம் செய்ய முடியாமல் திரும்பும் நிலையையும் தவிர்க்கலாம்.

தேரோட்டத்தின்போதும் ஜிபிஎஸ் செயலியைப் பயன்படுத்தி இதே பலன்களை பெறலாம். தற் காலத்தில் ஜிபிஎஸ் டிராக் முறையை செயல்படுத்துவதற்கு பெரிய செலவோ, தொழில்நுட்பமோ பிரத்யேகமாக தேவையில்லை என்பதால் காவல் துறையும், கோவில் நிர்வாகமும் இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்றனர்.

மதுரை காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சித்திரைத் திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எந்தெந்த மண்டகப்படிகளில் எந்த நேரத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார் என்பதை பக்தர்கள் துல்லியாக செல்போனில் தெரிந்துகொள்ள ‘டிராக் அழகர்’ என்ற செயலி செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு தேவையிருப்பின் ‘டிராக் அழகர் ’ முறை மீண்டும் செயல் படுத்தப்படும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x