Published : 19 Apr 2025 06:04 AM
Last Updated : 19 Apr 2025 06:04 AM

புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை, சிலுவைப் பாதை ஊர்வலம்

புனித வெள்ளியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில் நேற்று நடைபெற்ற சிலுவை பாதை பேரணியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப் பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. அன்று முதல் 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடித்தனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இதன்படி கடந்த ஏப்.13-ம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் புனித வியாழன் அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்படுவதற்கு முன் தன் சீடர்களின் பாதங்களை கழுவினார்.

இதை உணர்த்தும் வகையில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், தேவாலய குருக்கள், பொதுமக்களை சீடர்களாக அமர வைத்து, அவர்களின் பாதங்களை கழுவும் நிகழ்வு நடந்தது.

சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையார் தேசியத் திருத்தலத்தில் மாற்றுத் திறனாளி, மூன்றாம் பாலினத்தவர், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோரின் பாதங்களை சென்னை - மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி கழுவினார். இந்நிலையில், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் புனித வெள்ளி நேற்று (ஏப்.18) கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடந்தது. சாந்தோம் தேவாலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் தேவாலயம், பிராட்வே தூய அந்தோணியார் திருத்தலம், பெரம்பூர் லூர்து அன்னை தேவாலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது.

அதைத்தொடர்ந்து, அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை வழிபாடு நடந்தது. புனித வெள்ளி தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், நாளை (ஞாயிறு) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x