Published : 19 Apr 2025 04:20 AM
Last Updated : 19 Apr 2025 04:20 AM
சென்னை: சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனி மாதமும் விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில், இந்த ஆண்டு பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து புன்னை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஏப். 14-ம் தேதி பரமபதநாதன் திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலித்தல், சிம்ம வாகன வீதி உலாவும், 15-ம் தேதி கருட சேவை நிகழ்வும் நடைபெற்றன.
16-ம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை நிகழ்வும், 17-ம் தேதி பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்தில் அருள்பாலித்தல் நிகழ்வும் நடைபெற்றன. நேற்று சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானம், யானை வாகன வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 19-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். நாளை பல்லக்கு - வெண்ணெய்தாழி திருக்கோலத்தில் அருள்பாலித்தல், குதிரை வாகன வீதி உலா நடக்கிறது. 21-ம் தேதி தீர்த்தவாரியும், 22-ம் தேதி சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT