Published : 17 Apr 2025 06:01 PM
Last Updated : 17 Apr 2025 06:01 PM

பாம்பனில் 300 ஆண்டு பழமை வாய்ந்த சிதம்பரம் தீர்த்தம் புனரமைப்பு

பாம்பனில் புனரமைக்கப்பட்ட சிதம்பரம்  தீர்த்தம்

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் 300 ஆண்டு பழமையான சிதம்பர தீர்த்தத்தை விவேகானந்தா கேந்திரம் சார்பாக புனரமைக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தொடர்புடைய 108 புனித தீர்த்தக்குளங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இவற்றில் ராமநாதசுவாமி கோயிலின் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களும் அடக்கம். முன்பு ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் ஒரு மாத காலம் தங்கி 108 தீர்த்தங்களிலும் தங்களின் பாவங்கள், தோஷங்களைப் போக்கி விட்டுச் செல்வார்கள்.

இந்த 108 தீர்த்தங்களில் சில திர்த்தங்கள் தனியார் ஆக்கிரமிப்பு, இயற்கை சீற்றங்களினால் அழிவுக்குள்ளாகியும் இருந்தன. இந்த தீர்த்தங்களை கண்டுபிடித்து, முட்புதர்களை அகற்றி, சுற்றுச்சுவர் எழுப்பி, பக்தர்கள் செல்ல ஏதுவாக விவேகானந்த கேந்திரத்தின் பசுமை ராமேசுவரம் திட்டத்தின் கீழ் கடந்த 12 காலமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரையிலும் 50 தீர்த்தங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. தர்மர், சர்வரோக நிவாரண, பரசுராம், ஞானவாதி, குமுதம், ஹர, நீலகண்ட, பனச்ச, கிருஷ்ண ஆகிய தீர்த்தங்களில் முழுமையாக மணலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

படம்: எஸ். முஹம்மது ராஃபி

இந்நிலையில், ராமேசுவரம் அருகே பாம்பன் ஊராட்சியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மணலால் மூடப்பட்டு முட்சுவர்களால் சூழப்பட்டிருந்த சிதம்பர தீர்த்தம் கண்டறியப்பட்டு, பசுமை ராமேசுவரம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி அம்மாள் தலைமையில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இது குறித்து பசுமை ராமேசுவரம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி அம்மாள் கூறும்போது, ''சிதம்பரம் தீர்த்தம் பாம்பன் கிராம மக்களின் குடிநீர் தேவை மற்றும் பக்தர்கள் நீராட இந்த தீர்த்தம் முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. முட்புதர்கள், மணல் மூடிய நிலையில் உள்ள இந்த தீர்த்தத்தை கண்டறிந்து, புனரமைக்கும் பணிகள் ஓராண்டிற்கு முன்பு துவங்கின. தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்ததும் பாம்பன் கிராம மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய சிதம்பரம் தீர்த்தம் பயன்படும்,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x