Published : 15 Apr 2025 05:51 PM
Last Updated : 15 Apr 2025 05:51 PM

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி

கோப்புப்படம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஏப்.15) வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரை திருவிழா ஏப். 28-ம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய விழாவான திருக்கல்யாணம் மே 8-ம் தேதி கோயிலின் வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்குமேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது. உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in- மற்றும் கோயிலின் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in -ல் ஏப்.29 முதல் மே 2-ம் தேதி இரவு 9 மணிவரை ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவர் இரண்டு ரூ.500 கட்டணச்சீட்டும் அல்லது மூன்று ரூ.200 கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்யலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டுக்களை பதிவு செய்ய முடியாது. ஒரு பதிவுக்கு ஒரு கைபேசி எண் பயன்படுத்தலாம். பாதுகாப்பு காரணமாக குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும். மேலும், கோயிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியிலுள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை கோயில் பணியாளர்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனுமதித்த கட்டணச் சீட்டுகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மே 3-ம் தேதி குறுந்தகவல் அனுப்பப்படும். அதனை மே 4 முதல் 6-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியிலுள்ள மையத்தில் காட்டி கட்டணச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.

திருக்கல்யாணம் மே 8-ம் தேதி காலை 08.35 மணிக்குமேல் 08.59 மணிக்குள் நடப்பதால் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் கோயிலுக்கு வரவேண்டும். ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரர் சன்னதி வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வடக்கு ராஜகோபுரம் வழியில் அனுமதிக்கப்படுவர். கட்டணமில்லா தரிசனத்தில் முதலில் வருபவர்களுக்கு அனுமதி என்ற முறைப்படி தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்..

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தின்போது ரூ.50, ரூ.100 மொய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இந்துசமய அறநிலையத் துறை இணையதளம் https://hrce.tn.gov.in மற்றும் கோயிலின் இணையதளம் https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற முகவரியில் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்தலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x