Published : 14 Apr 2025 03:45 PM
Last Updated : 14 Apr 2025 03:45 PM
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி, பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தங்க கவசத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். பின்னர் நாதஸ்வரம் முழங்க வெள்ளி பல்லக்கில் கோயிலில் இருந்து சிவனின் பிரதிநிதியாகிய அங்குசதேவரும், விநாயகரின் பிரதிநிதியாகிய அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோயில் குளப் படித்துறைக்கு வந்தனர்.
அங்கு, தேவாரப் பாடல்களுடன் அங்குச தேவருக்கும், அஸ்திர தேவருக்கும் பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆராதனை நடத்தினர். பின்னர் பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தொழில், வணிகம் சிறப்பாக நடைபெற வேண்டி, கோயில் வளாகத்தில் அமர்ந்து சிலர் புதுக் கணக்கு தொடங்கி வழிபாடு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT