Published : 14 Apr 2025 12:10 AM
Last Updated : 14 Apr 2025 12:10 AM

வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

வேளாங்கண்ணியில் நேற்று நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையையொட்டி, மார்ச் 5-ம் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் தென்னங்கீற்றிலான குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாகச் சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம்.

அந்தவகையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று காலை குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, குருத்தோலைகளை ஏந்தி ‘உன்னதங்களிலே ஓசன்னா, தாவீதின் மைந்தனே ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஓசன்னா’ என்று பாடி பவனியாகச் சென்றனர்.

பேராலய முகப்பு பகுதியில் இருந்து வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பவனி, பேராலய கீழ் ஆலயத்தை அடைந்தது. தொடர்ந்து, பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன. கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x