Published : 13 Apr 2025 04:35 PM
Last Updated : 13 Apr 2025 04:35 PM

தூத்துக்குடி | குலசை முத்தாரம்மன் கோயில் மருத்துவ மைய பணியாளர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள்

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசை முத்தாரம்மன் கோயிலில் புதிய மருத்துவ மையத்தைத் திறந்து மருத்துவர், பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அமைச்சர்கள் இன்று வழங்கினர்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று (13.04.2025) சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பெருமக்கள் கோவில்பட்டி, அருள்மிகு பூவநாதர் சுவாமி திருக்கோயில் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டு, வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு சென்று, அங்கு பக்தர்களின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தினை திறந்து வைத்து, புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளையும் நிறைவேற்றி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, அருள்மிகு பூவநாதர் சுவாமி திருக்கோயில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

2024 -25 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பில், ''அதிக அளவில் பக்தர்கள் வருகை புரியும் 17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த ஆண்டு கூடுதலாக திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதியதாக அமைக்கப்படும்.'' என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு நேரில் சென்று அங்கு பக்தர்களின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தினை திறந்து வைத்து மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

இந்த மருத்துவ மையத்தில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. தற்போது வரை 19 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை 7,50, 000 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் அன்புமணி, ஞானசேகரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x