Published : 13 Apr 2025 01:05 PM
Last Updated : 13 Apr 2025 01:05 PM
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 4-ம் திருநாளான கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு குடவரை வாசல் தரிசனம் நடந்தது.
விழாவில், கடந்த 10-ம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீநடராஜர் சிவப்பு சார்த்தியும், நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளை சார்த்தியும் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு சைவ வேளாளர்கள் சங்கத்தில் ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீநடராஜருக்கு பச்சை சார்த்தி சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பச்சை சார்த்திய சப்பரத்தில் எழுந்தருளி ஸ்ரீநடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 9-ம் நாளான இன்று (13-ம் தேதி) காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. 5.30 மணிக்கு விளா பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 7.45 மணிக்கு மேல் சுவாமி மற்றும் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினர். காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் தலைமை வகித்து வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, துரைவைகோ எம்.பி., அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இணை ஆணையர் ம.அன்புமணி, நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
முதலில் சுவாமி எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது அதனை தொடர்ந்து அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இரண்டு தேர்களும் ரத வீதிகளை சுற்றி வந்து மதியம் சுமார் ஒரு மணி அளவில் நிலையை அடைந்தன. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT