Published : 09 Apr 2025 06:15 AM
Last Updated : 09 Apr 2025 06:15 AM

மடிப்பாக்கம் ஐயப்பன் கோயிலுக்கு ஏப்.11-ல் கும்பாபிஷேகம்: 47 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது

சென்னை: மடிப்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்.11-ம் தேதி (நாளை மறுதினம்) நடைபெறுகிறது.

இதுகுறித்து, ஸ்ரீ ஐயப்பன் மண்டலி செயலாளர் ஆர்.மகாலிங்கம், ஸ்ரீ ஐயப்பன் கோயில் அறக்கட்டளை செயலாளர் ஆர்.வி.வீரபத்ரன் ஆகியோர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மடிப்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோயில் கடந்த 1978-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி சபரிமலை தந்திரி செங்கன்னூர் தாழமன் மடம் பிரம்மஸ்ரீ நீலகண்டரு தந்திரி மூலம் கட்டப்பட்டது. இந்நிலையில், 47 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏப்.11-ம் தேதி (நாளை மறுதினம்) காலை 8.27 மணி முதல் காலை 9.57 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

சபரிமலை பரம்பரை பூசாரிகள்: சபரிமலையின் பரம்பரை பூசாரிகள் செங்கன்னூர் தாழமன் மடம் பிரம்மஸ்ரீ கந்தரரு மோகனராரு தந்திரி, பிரம்மஸ்ரீ மகேஷ் தந்திரி ஆகியோரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், பந்தளம் மகாராஜா குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும், பூஜைகளும், சடங்குகளும் இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது.

மேலும், சபரிமலைக்குப் பிறகு புனித 18 படிகளின் மேல் இறைவன் ஸ்ரீ ஐயப்பன் அமர்ந்திருக்கும் முதல் கோயில் மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் கோயில் ஆகும். இக்கோயிலில் தினசரி பூஜைகள் தந்திரி முறைகளில் செய்யப்படுகின்றன. பக்தர்கள் இந்தக் கோயிலை உத்தர சபரி கிரிசம் என்று அழைக்கின்றனர்.

கும்பாபிஷேக தினத்தில் கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவில் பங்கேற்பது போன்று 100 இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் செண்டை மேளம் இசை நிகழ்ச்சியும் நடைபெறும். கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x