Published : 08 Apr 2025 01:34 PM
Last Updated : 08 Apr 2025 01:34 PM

பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்பூர்: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் ''பண்ணாரி" எனப் போற்றப்படுவதுமான பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, குண்டம், தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 6-ம் தேதி, அம்மனுக்கு மஞ்சள் நீர், பொங்கல் வைத்து வழிபாடும், நேற்று காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக ( ஏப்ரல் 8. ஆம் தேதி) இன்று அதிகாலை 3 மணிக்கு, குண்டம் பூ இறங்குதல் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 40 நாள்கள் தீவிரமான விரதம் இருந்து, துளசி மாலை, மஞ்சள் ஆடை அணிந்து, மாலையில் தீச்சட்டி (பூவோடு) ஏந்தி, பாத யாத்திரையாக பெருமாநல்லூருக்கு நடந்து வந்தனர். இன்று அதிகாலை நான்கு மணி முதல் கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த 60 அடி குண்டத்தில் இறங்குவதற்காக, 2 கிலோமீட்டர் தூரம் வரிசையில், கைக்குழந்தைகளுடன் காத்திருந்தனர்.

இதில் அதிகாலை 4 மணிக்கு காப்புகட்டு பூசாரிகள் கைக்குண்டம் இறங்கினர். இதையடுத்து, வீரமக்கள் குண்டம் இறங்கினர். இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கிலான பக்தர்கள் கைகளில் வேப்பிலையுடன், குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமானோர் கையில் குழந்தையை ஏந்தி வந்து குண்டம் இறங்கினர்.

இதையடுத்து, அம்மனுக்கு அபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்று, காலை 10 மணிக்கு குண்டம் மூடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சிறப்பு அக்னி அபிஷேகம், அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு, அம்மன் சிங்க வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வரிசையாக சென்று அம்மனை தரிசனம் செய்யவும், தடுப்பு அமைக்கப்பட்டு பந்தல் போடப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில், பந்தல் அமைத்து குடிநீர் வசதி, மருத்துவ வசதி, 30 இடங்களில் மொபைல் டாய்லெட் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. கோயில் வளாகத்தைச்சுற்றி 70 இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸாரின் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 700 -க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x