Published : 08 Apr 2025 06:15 AM
Last Updated : 08 Apr 2025 06:15 AM
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள், ‘ஆரூரா, தியாகேசா’ என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சைவ சமயத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில், ஆயில்ய நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆழித்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.
அதன்படி, நிகழாண்டு பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரமான நேற்று ஆழித் தேரோட்டம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு, ஆழித்தேரில் நேற்று முன்தினம் இரவு தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து நேற்று அதிகாலை 5.40 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 9 மணிக்கு ஆழித் தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன், மாவட்ட எஸ்.பி கருண் கரட், நாகை எம்.பி வை.செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கத்துடன் உற்சாகமாக வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த சிவனடியார் திருக்கூட்டத்தினர் பஞ்ச வாத்தியங்களை இசைத்து, தேர் இழுக்கும் பக்தர்களுக்கு உற்சாகமூட்டினர்.
ஆழித்தேரை பின் தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் வந்தன. ஆழித்தேர் நான்கு வீதிகள் வழியாகவும் சென்று மாலையில் மீண்டும் நிலையை அடைந்தது.
விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேரோட்டம் நடைபெறும் அனைத்து வீதிகளிலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவையொட்டி பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT