Published : 05 Apr 2025 02:42 PM
Last Updated : 05 Apr 2025 02:42 PM
பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.5) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.11-ம் தேதி நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (ஏப்.5) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி பட்டக்காரர் மடத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் பழநி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தீர்த்த காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி யானை, தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் ஆறாம் நாளான ஏப்.10-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்.11-ம் தேதி பங்குனி உத்திரத்தன்று, நண்பகல் 12 மணிக்கு தேரேற்றம், மாலை 4.30 மணிக்கு மேல் கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.14-ம் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காலர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT