Last Updated : 04 Apr, 2025 02:49 PM

 

Published : 04 Apr 2025 02:49 PM
Last Updated : 04 Apr 2025 02:49 PM

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை; கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏழாவது படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஏப்.4) நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மார்ச் 30-ம் தேதி மாலை மங்கள இசை, திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் வழிபாடு, இறை அனுமதி பெறுதல், கிராமசாந்தி பூஜை ஆகியவை நடைபெற்றன. மார்ச் 31-ம் தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல் ஆகியவை நடந்தன.

பிரதான ராஜகோபுரம் உள்ளிட்ட கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் மொத்தம் 18 கலசங்கள் பொருத்தப்பட்டன. அதேபோல, யாக பூஜைகளுக்காக கோயில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. ஏப்.1-ம் தேதி முதற்கால யாக வேள்வி தொடங்கியது. நேற்று ஐந்தாம் கால யாக வேள்வி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக நாளான இன்று (ஏப்.4) அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜை, திருமறை, திருமறை பாராயணத்தைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கு 6-ம் கால வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாக வேள்வி கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்தும் சமகால கும்பாபிஷேகம் நடைபெற்றது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாசலம் அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் மங்கள வாத்தியம் இசைக்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். பின்னர் ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீசுவரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜப் பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சமகால கும்பாபிஷேகம் நடந்தது . தொடர்ந்து பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம், 5.30 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், திருவீதி உலா ஆகியவை நடைபெற உள்ளன. வெயில் காலமாக இருப்பதால் பக்தர்கள் வரும் பாதைகளில் நிழற்குடை அமைத்து, நீர்மோர் வழங்கப்பட்டது. படிகளில் ஏறி வரும் பக்தர்கள் பாதுகாப்பாக வரவும், 2000 வாகனங்கள் நிறுத்த தேவையான இடவசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கும்பாபிஷேகத்தை பக்தர்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக கோயில் வளாகம் மற்றும் அடிவார பகுதிகளில் 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. கும்பாபிஷேகம் புனித தீர்த்தத்தை ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள சந்நதிகளின் மண்டபங்கள் மீது 750 பேரும், வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் 1,500 பேரும் நேரில் காண அனுமதிக்கப்பட உள்ளனர். மருதமலையில் கோயில் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு மினிபேருந்துகள் ஆகியவை மட்டும் மலையில் அனுமதிக்கப்பட்டன. இதர வாகனங்கள் மலையடிவாரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் இடங்களில் நிறுத்தப்பட்டன.

பின்னர் பக்தர்கள் படி வழியாக மலை கோயில் வந்தடைந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மொத்தம் 6 இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி நிறுத்தி ஒவ்வொரு குழுவாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் தலைமையில், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், இன்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், சிறப்புக் காவல் படை போலீஸார், ஊர்க்காவல் படையினர் என ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

கூடுதல் பேருந்துகள் இயக்க பக்தர்கள் வலியுறுத்தல்: அதேபோல மலைக் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு பக்தர்கள் கீழே செல்ல புதிய பேருந்து வசதி இல்லாததால் தவித்தனர். இது குறித்து பக்தர்கள் கூறும்போது, " கோவை மாநகர காவல் துறை சார்பில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களுக்கு போதிய அளவு பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

ஆனால் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்து ஏறி சென்றனர். அதே வேளையில் கூட்ட நெரிசலை தொடர்ந்து பேருந்துகளில் இடம் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து மலை அடிவாரத்தை அடைந்தனர்" என்றனர். | பார்க்க > கோவை மருதமலை கோயில் குடமுழுக்கு விழா: புகைப்படத் தொகுப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x