Published : 04 Apr 2025 06:04 AM
Last Updated : 04 Apr 2025 06:04 AM

மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பங்​குனி பெரு​விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது

சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. (அடுத்த படம்) விழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டம். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக, இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் இசைக்க, கோயில் மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கொடி மீது மலர்தூவி வணங்கினர். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகபெருமான் ஆகியோர் பல்வேறு மலர் அலங்காரத்தில் கோயில் சன்னதியில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..

பின்னர், பவளக்கால் விமானத்தில் கபாலீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவில் சிவ பூஜை காட்சியும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகன வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் கிராம தேவதை பூஜை நடைபெற்றது.

கிராம தெய்வமான ஸ்ரீ கோலவிழி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஏப்.5-ம் தேதி அதிகார நந்தி எழுந்தருளும் நிகழ்வும், 7-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி, 9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூவர் திருவிழாவும், 12-ம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, 12-ம் தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் ஏறி உற்சவமும் நடக்கிறது. 14-ம் தேதி திருமுழுக்குடன் பங்குனி பெருவிழா நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x