Published : 03 Apr 2025 02:17 PM
Last Updated : 03 Apr 2025 02:17 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா இன்று காலை 11 மணிக்கு கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 11-ம் தேதி பங்குனி உத்திர நாளில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
108 வைணவ திவ்ய பாசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து பங்குனி உத்திரம் நாளில் ரெங்கமன்னாரை மணம் புரிந்தார் என்பது கோயில் வரலாறு. அதனால் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா இன்று காலை 11 மணிக்கு கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ஆண்டாள் ரெங்கமன்னார் திவ்ய தம்பதியினர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். 13 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் தினசரி இரவு பல்வேறு வாகனங்களில் ஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இதில் 5-ம் நாள் விழாவான ஏப்ரல் 7-ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவான ஏப்ரல் 11-ம் தேதி காலை 7.05 மணிக்கு செப்புத் தெரோட்டமும், மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. அதன்பின் பெரியாழ்வார், ஆண்டாளை கன்னிகா தானம் வழங்கும் வைபவம் நடைபெறகிறது. 15-ம் தேதி குறடு மண்டபத்தில் புஷ்பயாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
திருக்கல்யாண திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT