Published : 03 Apr 2025 06:30 AM
Last Updated : 03 Apr 2025 06:30 AM
சென்னை: சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் 75-வது அவதாரத் திருநாள் வைபவம், சிருங்கேரி உள்ளிட்ட பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் (சிருங்கேரி மடம்) 35-வது பீடாதிபதியான ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் தமது சீடராக சீதாராம ஆஞ்சநேயலு என்கிற பிரம்மச்சாரியை ஏற்றுக் கொண்டார். சிறு வயதிலேயே வேதம், சாஸ்திரம் முதலியவற்றில் நன்குகற்றுத் தேர்ந்து ஒழுக்க சீலராக விளங்கிய சீடருக்கு 1974-ம் ஆண்டு நவ. 11-ம் தேதி சந்நியாசிரமத்தை முறைப்படி வழங்கி ‘ஸ்ரீ பாரதி தீர்த்தர்’ என்கிற யோகப் பட்டத்தை வழங்கினார்.
ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அலகுமல்லிபடு என்னும் கிராமத்தில் வாழ்ந்த வெங்கடேஸ்வர அவதானி - அனந்தலட்சுமி தம்பதிக்கு நல்மகனாக 1951-ம் ஆண்டு ஏப். 11-ம் தேதி சிவபெருமானின் திருவருளால் அவதரித்தார். சிறுவயதிலேயே துறவறம் பெற்ற இவர் தமது குருநாதர் மூலம் வேத சாஸ்திரங்களில் மேற்படிப்பையும், மடத்தின் மரபுகளையும், நிர்வாக நுணுக்கங்களையும் திறம்பட கற்றறிந்தார்.
1989-ம் ஆண்டு குருநாதர் சித்தியடைந்த பின்னர் மடத்தின் மரபுப்படி 36-வது பீடாதிபதியாக அதே ஆண்டு பொறுப்பேற்றார். சிறந்த தவயோகியான இவர் தொலைநோக்கு சிந்தனையுடன் மடத்தின் வளர்ச்சியில் இன்றளவும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நாட்டின் பல இடங்களில் மடத்தின் கிளைகளையும், கோயில், தியானமண்டபம், வேதபாடசாலை, கோசாலை, மருத்துவமனை போன்றவற்றையும் ஏற்படுத்தினார்.
சிருங்கேரி மடத்தின் வளாகத்தை சீர்படுத்தி புதியதாக ‘குருநிவாஸ்’ என்கிற பெரிய மண்டபம், பக்தர்கள் வசதியாக தங்குவதற்கு விடுதிகள், தினமும் இருவேளை இலவசமாக உணவு அருந்த பெரிய அளவிலான அன்னசாலை, ஸ்ரீ ஆதி சங்கரருக்கு புதிய பொலிவுடன் தனியாக கோயில்ஸ்ரீ சாரதாம்பாள் கோயில் கோபுரத்துக்கு தங்க கவசம், தங்கத் தேர், தங்க வாயில், மடத்தின் முன்புறம் பெரியளவில் ராஜ கோபுரம், ஸ்ரீ ஆதிசங்கரருக்கு சிருங்கேரி அருகே சிறிய குன்றில் மிகப் பெரிய சிலை என்று பல திருப்பணிகளை உலகம் போற்றும் வகையில் செய்துள்ளார்.
மேலும் ஏழை எளியோருக்கு உதவும் வண்ணம் மடத்தின் சார்பில் சமூக, சமுதாய நற்பணிகளை முனைப்புடன் செய்து வருகிறார். பன்மொழி வித்தகரான இவர், தன்னை நாடி வரும் பக்தர்களின் மனக்குறைகளை தீர்த்து, அவர்களுக்கு நல்வழியை காட்டுவதில் கருணைக் கடல் என்றே சொல்லலாம். இவரது 75-வது அவதாரத் திருநாளை (வர்தந்தி) முன்னிட்டு சிருங்கேரி, கடந்த மாதம் 30-ம் தேதி முதல் விழாக்கோலம் பூண்டுள்ளது.
சிறப்பு உபன்யாசம்: இந்த வைபவத்தை முன்னிட்டு ஏப். 3-ம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள தத்வலோகா அரங்கில், ‘குரு வடிவாக திகழும் தட்சிணாமூர்த்தி’ என்ற தலைப்பில் பிரம்மஸ்ரீ முனைவர் மணி திராவிட் சாஸ்திரிகள் உபன்யாசம் நிகழ்த்த உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT