Last Updated : 02 Apr, 2025 06:40 AM

 

Published : 02 Apr 2025 06:40 AM
Last Updated : 02 Apr 2025 06:40 AM

பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு

தேனி: பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பங்குனி மாதம் ஆராட்டு (நீராடல்) விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தினமும் பல்வேறு வழிபாடுகள் நடைபெறுவதுடன், நிறைவு நாளன்று சுவாமி விக்கிரகத்தை புனிதநதியில் நீராட்டி வழிபாடு மேற்கொள்வர்.

இதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 11-ம் தேதி ஆராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று (புதன்) கொடியேற்ற வைபவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை சபரிமலை சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்தார். முன்னதாக விளக்கேற்றி, மங்கல வாத்தியங்கள் முழங்கப்பட்டன.

நடை திறந்த பிறகு 18-ம் படி வழியே கீழே சென்ற தந்திரிகள் மற்றும் நம்பூதிரி ஆகியோர், அங்குள்ள ஆழிக்குண்டத்தில் விளக்கு ஏற்றினர். பின்னர் சன்னிதானத்தில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

நாளை காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழாவுக்கான கொடியை ஏற்றிவைக்க உள்ளார். விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன் மதியம் உற்சவ பலி, இரவில் யானை மீது சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 10-ம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். விழாவின் உச்ச நிகழ்வாக 11-ம் தேதி காலை 7 மணிக்கு உஷபூஜை முடிந்ததும் யானை மீது சுவாமி எழுந்தருள உள்ளார். பின்பு பம்பை நதியில் ஐயப்பனுக்கு புனித நீராட்டு நிகழ்ச்சி (ஆராட்டு) நடைபெறும்.

அடுத்த 2 நாட்கள் உத்திர திருவிழா நடைபெறும். தொடர்ந்து சித்திரை மாத மாதாந்திர பூஜை தொடங்குவதால் ஏப். 18-ம் தேதி வரை வழிபாடுகள் நடைபெற உள்ளன. நேற்று நடை திறந்ததும் சன்னிதானத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சபரிமலையில் நிலவி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x