Last Updated : 31 Mar, 2025 07:58 AM

 

Published : 31 Mar 2025 07:58 AM
Last Updated : 31 Mar 2025 07:58 AM

‘ஈத்துவக்கும் ஈகைத் திருநாள் ரமலான்’

புனித ரமலான் மாதம் நோன்பு நோற்று முடித்த பின் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பெருநாள் 'ஈதுல் ஃபித்ர்' என்று அழைக்கப்படுகிறது. 'ஈது' என்ற வார்த்தைக்கு 'பெருநாள்' என்றும், 'பித்ர்' எனும் அரபிச் சொல்லுக்கு 'நோன்பை விடுதல்' என்றும் பொருள் கொள்ளலாம்.

நோன்பு முடிந்ததின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, இஸ்லாமிய சகோதரர்கள் ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டவுடன் 'சதகத்துல் ஃபித்ர்' எனும் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய தர்மத்தை வழங்கத் தொடங்குவர். தெரிந்தோ தெரியாமலோ நோன்பில் ஏற்பட்ட சிறு தவறுகள் இந்த ஃபித்ர் தர்மத்தால் நீக்கப்பட்டு நோன்பு முழுமை பெறும்.

பெருநாள் அன்று அதிகாலை துயிலெழுந்து வழக்கம்போல் ஃபஜ்ர் என்னும் வைகறைத் தொழுகை முடித்து, நேரத்தோடு குளித்து, புத்தாடையணிந்து, பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவர். தொழுகை முடிந்ததும், ஆனந்தப் பேருவுவகையால் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வர். உறவினர்களின் வீடுக ளுக்குச் செல்வர், மதியம் சிறந்த உணவை சமைத்து உண்பர். வெளிப் படையாக பார்த்தால்,பெருநாள் என்பது அவ்வளவுதான்! ஆனால், அந்தப் பெருநாள் தரும் பாடமும் செய்தியும் மகத்தானவை.

இஸ்லாமியர்களுக்கு இரண்டே பெருநாள்கள்தான். ஒன்று நோன்புப்பெருநாள்.மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள். இந்த இரு பெருநாள்களும் வெறும் கொண்டாட்டத்துக்கான நாட்களல்ல. மிக உயர்ந்த லட்சியத்தையும், மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. வாண வேடிக்கை, ஆடல், பாடல், கூத்து, கும்மாளம், கேளிக்கை என எந்த ஆரவாரமும் இல்லாத சாந்திமிக்க அமைதித் திருநாள்களே இப்பெருநாள்கள். வருடப் பிறப்பு வந்தால்கூட குடித்துக் கும்மாளமிடும் சூழலுக்கிடையே கண்ணியம் மிளிரும் புண்ணிய நாள்களே இவை.

பசியறியும் பயிற்சி, தியாகத்தின் பாடம் என்ற இருபெரும் பேருண்மைகளை புரியவைத்து அதற்கு நன்றி செலுத்தும் தருணங்களாகவே பெருநாள்கள் கொண்டாடப்படு கின்றன. பெருநாள் என்பது இறைவனை வணங்குவது, அவன் புகழ்பாடுவது, அவனுக்கு நன்றி செலுத்துவது என்ற அம்சங்கள் மட்டும்தாம்.

`அல்லாஹு அக் பர்’ (இறைவன் மிகப்பெரிய வன்) என்று சொல்லி இறைவனைப் புகழும் தக் பீர்தான் பெருநாள் தினத் தின் பெரு முழக்கமாகும். அதனால்தான் ஒரு முஸ்லிமின் வாழ்வின் முக்கிய தருணங்களில் தக்பீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ‘உங்க ளின் ஈதுப் பெருநாட்களை தக்பீரைக் கொண்டு அழகுபடுத்துங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை. நிறம், குலம் என்ற வேறுபாடு இல்லை. எவ்வளவுதான் பணம் படைத்தவனாயினும் இறைவன் முன் அவனும் அடிமையே! `இறைவா... நாங்கள் உன் அடிமைகளே. நீயே மிகப்பெரியவன்!’ என்று உரத்துச் சொல்ல வேண்டும்.

இப் பெருநாளின்போது நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவார்கள். இறைவனைப் புகழ்ந்தவண்ணம் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்ட அந்த உரையில் மனிதனிடம் களையப்படவேண்டிய தீமைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கண்டித்தும் நன்மைகளை அடையாளப்படுத்தி, அவற்றை ஊக்கப்படுத்தவும் செய்வார்கள்.

இதே வழியில், இன்றும் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களிலும் ஒன்று கூடினோம்; தொழுதோம்; கலைந்தோம் என்றில்லாமல் இன்றையச் சூழலில் மனிதனிடம் மிகுந்துவரும் தீமைகளை எச்சரித்தும், நன்மைகளை மேலோங்கச் செய்ய வலியுறுத்தியும் பெருநாள் தொழுகையின்போது உரை நிகழ்த்தப்படுகிறது.

நமது இந்தியத் திருநாட்டில், இந்த ‘ஈதுல் பித்ர்’ நன்னாளில் இஸ்லாமியர்களை அனைத்து சமயத்தினரும் வாழ்த்துவதும், இஸ்லாமியர் வீடுகளில் விருந்துண்டு மகிழ்வதும் 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் மாபெரும் கருத்தை பறைசாற்றுவதின் ஓர் அங்கமாகும். ரமலான் பெருநாளை நாமும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். ஏழை எளியோரையும் சந்தோஷமாகக் கொண்டாடிட உதவுவோம்.

- மவ்லானா காஜி மு. சையது மசூது ஜமாலி, தலைமை இமாம் ஜும்ஆ மஸ்ஜித், மயிலாப்பூர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x