Published : 31 Mar 2025 12:33 AM
Last Updated : 31 Mar 2025 12:33 AM
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக போற்றப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு விழா மார்ச் 8-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் நாள்தோறும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட முதல் தேரில் விநாயகர், முருகன் மற்றும் அம்மனுடன் சோமஸ்கந்தராக சுவாமி எழுந்தருளினார். 2-வது தேரில் அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தேர் வடம் பிடித்தல் காலை 7.16 மணிக்கு தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் `நமச்சிவாய' முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு வீதிகளையும் வலம் வந்த தேரோட்டம் மாலையில் நிறைவடைந்தது. இதையொட்டி, திருவானைக்காவல் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏற்பாடுகளை அறநிலையத் துறை உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT