Published : 18 Mar 2025 03:16 PM
Last Updated : 18 Mar 2025 03:16 PM

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு ரூ.430 கோடியில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு 

கோப்புப்படம்

சென்னை: “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு அரசு சார்பில் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 2022 -2023 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2024-2025 100 கோடி என்று ரூ.300 கோடியை 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று நிதியை வழங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.300 கோடியோடு உபயதாரர் நிதி ரூ.60 கோடி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.70 கோடி என சேர்த்து ரூ.430 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் வாயிலாக இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது” என்று சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 18) வினா - விடை நேரத்தின்போது, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த கோயில் மூன்று துறைகளின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு இன்றும் திருப்பணி நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசியதாவது: “இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் தமிழக முதல்வர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு அரசு சார்பில் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 2022 -2023 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2024-2025 100 கோடி என்று ரூ.300 கோடியை 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று நிதியை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் ரூ.300 கோடியோடு உபயதாரர் நிதி ரூ.60 கோடி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.70 கோடி என சேர்த்து ரூ.430 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் வாயிலாக இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த ஆட்சியின் நீட்சியாக இந்த ஆண்டும் கூடுதலாக நிதியினை வழங்க முதல்வர் ஒப்புதல் தந்திருக்கின்றார். ஒட்டுமொத்தமாக 507 கோயில்களை ஆவணப்படுத்தி இருக்கிறோம்.

தமிழக முதல்வர் தலைமையிலான ஆட்சி இருக்கின்றபோதே இந்த அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்படும் என்பதை அறுதியிட்டு உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். அந்த வகையில் உறுப்பினர் கோரிய அனைத்து பணிகளையும் நிச்சயமாக நிறைவேற்றித் தரப்படும்,” என்று அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x