Published : 16 Mar 2025 02:31 AM
Last Updated : 16 Mar 2025 02:31 AM
வெயில் காலம் தொடங்கிய நிலையில், பழநி முருகன் கோயிலில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக மோர் வழங்கப்படுகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் மலைக் கோயிலுக்கு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் படிப்பாதை மற்றும் யானைப் பாதையைப் பயன்படுத்தி மலையேறிச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சுக்கு காபி இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் பழநி பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது.
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் யானைப் பாதை மற்றும் படிப்பாதை வழியாக மலையேறும் பக்தர்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்படுகிறது. மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் இடும்பர் கோயில் அருகே காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்தாலும், அவர்களுக்கும் மோர் வழங்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும், மலைக்கோயிலில் தரிசனம் மற்றும் அன்னதானத்துக்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு நடமாடும் தண்ணீர் வண்டிகள் மூலம் குடிநீர் தருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, யானைப் பாதை, படிப்பாதை மற்றும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT