Published : 13 Mar 2025 05:49 AM
Last Updated : 13 Mar 2025 05:49 AM
கும்பகோணம்: மாசிமக விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர்.
மாசிமக விழாவையொட்டி, கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோயில்கள், 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் 6 சிவன் கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்த கலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில் சுவாமிகள், அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமக குளக்கரைக்கு வந்தடைந்தனர். குளத்தில் அஸ்திர தேவருக்கு 21 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.
அப்போது, ‘சிவாய நம, சிவாய நம’ என பக்தர்கள் முழக்கமிட்டபடி மகாமக குளத்தில் புனித நீராடினர். தொடர்ந்து, சுவாமிகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு திரும்பினர். இதேபோல, திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோயிலிலும் தீர்த்தவாரி நடைபெற்றது.
விழாவில், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமா தேவி, உதவி ஆணையர்கள் ஹம்சன், கவிதா, சாந்தா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுகள் மூலம் மகாகமக குளத்தைச் சுற்றி வந்து, பக்தர்களை பாதுகாப்பாக புனித நீராட அறிவுறுத்தினர்.
3 கோயில்களில் தேரோட்டம்: முன்னதாக, மாசிமக விழாவையொட்டி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயார்களுடன் சக்கரபாணி சுவாமி, பாமா, ருக்மணி உடனாய ராஜகோபால சுவாமி, அம்புஜவல்லி தாயார் உடனாய ஆதிவராகப் பெருமாள் ஆகிய பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையிலும் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து, சாரங்கபாணி சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் பின்புறம் உள்ள பொற்றாமரை குளத்தில் தெப்பத்தில் உபயநாச்சியாருடன் பெருமாள் எழுந்தருளி, பகலில் ஒரு சுற்றும், இரவில் மின்னொளி அலங்காரத்தில் 2 சுற்றும் வலம் வந்தார். இரவு 11 மணிக்கு உபய நாச்சியாருடன் பெருமாள் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளல் வைபவம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT