Published : 12 Mar 2025 02:30 PM
Last Updated : 12 Mar 2025 02:30 PM
பழநி: மாசி மகத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் புதன்கிழமை (மார்ச் 12) நண்பகல் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் இன்று (மார்ச் 12) காலை வெள்ளி சங்கு உட்பட 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, கும்ப கலசங்களில் நீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதையடுத்து தீபாராதனை நடைபெற்றது. உச்சி கால பூஜையின் போது, போகர் சித்தரால் செய்யப்பட்ட நவபாஷாண சிலையான மூலவருக்கு 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாசி மகம், சுப முகூர்த்த தினத்தையொட்டி, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT