Published : 10 Mar 2025 12:25 AM
Last Updated : 10 Mar 2025 12:25 AM
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பல்வேறு அமைப்பினர், கிராமத்தினர் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
அம்மன் திருத்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், பூச்சொரிதல் விழா முக்கியத்துவம் வாய்ந்தது. உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்கவும், அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது இந்த விழாவின் சிறப்பம்சம்.
ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இந்த விரதம் கடைபிடிக்கப்படும். இந்த 28 நாட்களும் கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், பானகம் மற்றும் இளநீர் மட்டுமே அம்மனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும்.
இத்தகைய சிறப்புமிக்க பூச்சொரிதல் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் நேற்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து, காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பூக்கூடைகள் வைக்கப்பட்ட யானை முன்செல்ல, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பூத்தட்டுகளை ஏந்தியபடி கோயில் பிரகாரங்களில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றி பூச்சொரிதல் விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பூக்களை அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து, திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர், கிராமத்தினர், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலமாக ஏராளமான மலர்களை எடுத்துவந்து விடிய விடிய அம்மனுக்கு சாற்றி வழிபாடு நடத்தினர்.
பூச்சொரிதல் விழாவால், சமயபுரம் கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதைத் தொடர்ந்து வரும் வாரங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூச்சொரிதல் விழா நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT