Published : 09 Mar 2025 03:54 AM
Last Updated : 09 Mar 2025 03:54 AM
திருமலை: திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த தெப்பத்திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
திருமலையில் தெப்பத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் ஏகாதசியன்று தொடங்கப்பட்டு, பவுர்ணமியன்று நிறைவு பெறும். இவ்விழா இன்று தொடங்கப்பட உள்ளது. தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பத்தில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இதற்காக மின் விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களுடன் தெப்பம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கோயில் குளம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புது தண்ணீர் நிரப்பட்டுள்ளது. தெப்பத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தெப்பத்திருவிழா கடந்த 1468-ம் ஆண்டு முதல் திருமலையில் நடைபெற்று வருவதாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அப்போதைய விஜயநகர பேரரசரான சாளுவ நரசிங்க ராயர்தான் கோயில் அருகே உள்ள புஷ்கரணியின் நடுவே தெப்போற்சவம் நடத்த மேடை அமைத்தார் என குறிப்பிட்டுள்ளது. அப்போது முதல் இன்று வரை தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை திருப்பள்ளி ஓடை திருநாள் என்றும், தெப்ப திருநாள்ளு என்றும் அழைக்கின்றனர்.
தெப்போற்சவத்தில் முதல் நாள் ராம அவதாரத்திலும், 2-ம் நாள் கிருஷ்ணர் அவதாரத்திலும் காட்சி தரும் பெருமாள், 3, 4 மற்றும் 5-ம் நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தெப்பத்திருநாட்களை முன்னிட்டு சகஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் போன்ற சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT