Published : 08 Mar 2025 01:06 PM
Last Updated : 08 Mar 2025 01:06 PM

திருவானைக்காவல் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி: பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படுவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பிரம்மோற்சவம் என்ற பங்குனித் தேரோட்டத் திருவிழா பிரசித்திப் பெற்றது.

அதன்படி, திருவானைக்காவல் கோயிலில் பங்குனிப் பெருவிழா இன்று காலை, பெரிய கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இன்று மாலை முதல் 13-ம் தேதி காலை வரை விநாயகர், சுப்ரமணியர் உற்சவம் நடைபெறுகிறது. வரும் 13-ம் தேதி மாலை முதல் 16-ம் தேதி காலை தேவார மூவர் உற்சவம் (நால்வர் புறப்பாடு) நடைபெறுகிறது. 16-ம் தேதி மாலை முதல் 19-ம் தேதி காலை வரை கல்யாண சுந்தரமூர்த்தி உற்சவம் நடைபெறுகிறது.

வரும் 19-ம் தேதி மாலை சந்திரசேகரர் பட்டம் கட்டி ஏக சிம்மாசனத்தில் ஆனந்தவல்லி எழுந்தருளி 4-ம் பிரகாரம் வலம் வந்து திக் பந்தனம் கண்டருளல் வைபவம் நடைபெறுகிறது. 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சந்திரசேகரர் உடனுறை ஆனந்தவல்லி அம்மன் 3-ம் பிரகாரம் வலம் வருகின்றனர். வரும் 25-ம் தேதி மதியம் 12 மணிக்கு, எட்டுத்திக்கு (எண்திசை) கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று மாலை ஏக சிம்மாசனத்தில் அம்மனும் சோமாஸ்கந்தரும் எழுந்தருளி 4-ம் பிரகாரம் வலம் வருகின்றனர். தினந்தோறும் பல்வேறு இடங்களில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மனும், ஸ்வாமியும் மண்டகப்படி கண்டருள்கின்றனர்.

அதைத்தொடர்ந்து வரும் 29-ம் தேதி தெருவடைச்சான் எனப்படும் சப்பர ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம், வரும் 30-ம் தேதி காலை 7.09 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. விழாவின் நிறைவாக, சிவன், அம்மன் ஆகவும், அம்மன், சிவன் ஆகவும் வேடமிட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வரும், 'பஞ்சப் பிரகாரம்' மார்ச் 14-ம் தேதி நடைபெறுகிறது.

உலகத்திலேயே இந்தக் காட்சியானது இந்த திருக்கோயில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதக் காட்சியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x