Published : 07 Mar 2025 02:00 PM
Last Updated : 07 Mar 2025 02:00 PM

“பெண்களே சமுதாயத்தின் முதுகெலும்பு” - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் | கோப்புப்படம்

சென்னை: “ஒரு மகளே தந்தையை வழிநடத்துபவர், ஒரு சகோதரி சகோதரனை வழிநடத்துபவர், ஒரு தாயே குழந்தைக்கு முதல் ஆசிரியர். எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஒரு குருவே.பெண்கள் செய்யும் வேலைகளை பட்டியலிடுவது மிகவும் கடினம். அவர்களால் செய்ய இயலாத வேலைகளை பட்டியலிடுவதே சுலபம். உண்மையில் பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு,” என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்திய கலாச்சாரத்தில், பெண்கள் அதிகாரமடைய வேண்டும் என்ற கொள்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வருகிறது. நம்முடைய புராணங்களை பாருங்கள். பெண்களுக்கு எப்போதுமே முக்கியமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது. தேவி புராணம் மற்றும் தேவி பகவதத்தில் இது அழகாக விவரிக்கப்படுகிறது. பாதுகாப்புக்காக துர்கா, பொருளாதாரத்துக்காக லக்ஷ்மி, கல்விக்காக சரஸ்வதி.

நாம் நம்முடைய தேசத்தை “பாரத மாதா” என அழைக்கிறோம். வேறு எந்த நாட்டிலும் மக்கள் தங்கள் தேசத்தைத் தாயாக குறிப்பிடுவதில்லை. பெண்கள்தான் இந்த உலகில் நாம் பிறக்க காரணம். அத்துடன், எவ்வாறு வாழ்வது என்பதற்கும் முதல் பாடங்களை அவர்கள் தான் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். ஒரு தாய் தான் தன் குழந்தையின் முதல் குரு. பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும், நாட்டிலும் பல்வேறு முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.

மகளாக, சகோதரியாக, தாயாக, குழந்தையாக. தாய்மையின் பெருமை தாய்மையைப் பற்றிப் பேசும்போது, ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தாய்கள் சில நேரங்களில் குழந்தைகளை கண்டிக்கலாம். பிறகு அவர்களுக்கு குற்ற உணர்வு ஏற்படும். “நான் இதுபோல் செய்திருக்கக் கூடாது!” என்று எண்ணுவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு ஒழுங்கை கடைபிடிக்க கற்பித்தல் தவறானது அல்ல. இது ஒரு தடுப்பூசி மாதிரி. அவர்களை உறுதியானவர்களாக உருவாக்கும்.

ஒரு குழந்தை வீட்டில் ஒரே ஒரு கடுமையான வார்த்தையை கூடக் கேளாதபோது, வெளியில் யாராவது சிறிய விமர்சனமே செய்தாலும் மனமுடைந்து விடுவார்கள். ஒரு மகளே தந்தையை வழிநடத்துபவர், ஒரு சகோதரி சகோதரனை வழிநடத்துபவர், ஒரு தாயே குழந்தைக்கு முதல் ஆசிரியர். எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஒரு குருவே.பெண்கள் செய்யும் வேலைகளை பட்டியலிடுவது மிகவும் கடினம். அவர்களால் செய்ய இயலாத வேலைகளை பட்டியலிடுவதே சுலபம். உண்மையில் பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு.

பெண்கள் அவர்களின் உடல், மன நலனைக் கவனிக்க வேண்டும்.இன்று பெண்கள் வீடு, சமூகம், நாடு என அனைத்திலும் பேராதாரமாக செயல்படுகிறார்கள். இந்தப் பொறுப்புகளுக்குள் அவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலத்தையும் கவனிக்க வேண்டும். பல பெண்கள் மற்றவர்களை கவனித்துக்கொள்வதில் அவ்வளவு ஈடுபட்டு விடுகிறார்கள், அவர்கள் தங்களையே முழுவதுமாக மறந்து விடுகிறார்கள். இதனால், மன அழுத்தம், கவலை, மனநோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு.

அதனால், ஒவ்வொரு பெண்ணும் சிறிது நேரத்தை தனக்கென்று ஒதுக்க வேண்டும். உடலை, மனதை, ஆன்மாவை பராமரிக்க வேண்டும். பெண்கள் மற்றவர்களுக்கு மட்டுமல்லாது தங்களுக்காகவும் வாழ வேண்டும். ஆழ்மன பலத்தை உணருங்கள். பெண்கள் அவர்களுடைய சக்தியை உணர வேண்டும். ஒருபோதும் “நான் ஒரு பலஹீனமானவள்” என்று நினைக்கக் கூடாது. உங்களை நீங்கள் பாதிக்கப்பட்டவராக நினைத்தால், உங்கள் ஆற்றல், உற்சாகம், தன்னம்பிக்கை எல்லாம் குறைந்து விடும்.

உங்கள் மனதை ஒரு சிறு கருமுட்டையாகக் கட்டிப் போடுவீர்கள்.எப்போதும் குற்ற உணர்வுடன் வாழ்ந்தால், அது உங்களை முழுமையாகச் சிதைத்து விடும். ஆன்மிகப் பாதை உங்களை இந்தக் குற்ற உணர்விலிருந்தும் பாதிக்கபட்டோம் என்ற உணர்விலிருந்தும் விடுவிக்கும். ஆகவே, உங்களை நீங்களே குறை கூறுவதைக் நிறுத்துங்கள். பதிலாக, உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள தொடங்குங்கள். பாராட்டுதல் என்பது ஒரு தெய்வீக குணம்.

சமூக மாற்றத்துக்காக போராடுங்கள்.நம் சமூகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்கு பல மாற்றங்கள் தேவை. ஆனால் ஒரு விஷயம், “நான் ஒரு பெண்ணாக இருப்பதால் என்னை பாகுபாடாக நடத்துகிறார்கள்” என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். நீங்கள் மாற்றத்தை கொண்டு வரலாம். அது உங்கள் உரிமை. யாரிடமும் உரிமை கேட்க தேவையில்லை, அதைப் பற்றிய சந்தேகமே இருக்கக்கூடாது.

நீங்கள் எதிர்மறையான மாற்றங்களைப் பார்ப்பீர்களானால், அதை எதிர்த்து நிலைத்திருக்க வேண்டும். யாரும் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நீங்கள் உரிமைகளைப் பெற வேண்டும் என்று யாரிடமும் வேண்டிக் கொள்ள வேண்டியதில்லை. அவை உங்களுக்குள் இருக்கின்றன. நீங்கள் நினைப்பதை விட மிகவும் சக்திவாய்ந்தவர்கள் நீங்கள். பெண்கள் சமூகத்தின் மையப்புள்ளி. அவர்களின் சக்தியையும், வலிமையையும் அவர்கள் உணரும்போது, ஒட்டுமொத்த உலகமே மகிழ்ச்சி, அமைதி மற்றும் சகிப்புத்தன்மையுடன் மலர்ந்துவிடும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x