Published : 05 Mar 2025 08:26 PM
Last Updated : 05 Mar 2025 08:26 PM
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மார்ச் 5) பங்குனித் திருவிழாவையொட்டி காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் அரோகரா கோஷங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 5 முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு கோயிலில் கம்பத்தடி மண்டபத்திலுள்ள தங்கக் கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவர் சன்னதியிலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் சிம்மாசனத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்குப் பின் காலை 9.25 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இரவு தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இரண்டாம் நாளான நாளை (மார்ச் 6) விநாயகர் திருநாள் நடைபெறும். அதனையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறும். காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், மயில் வாகனம், இடப வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், பச்சைக்குதிரை, வெள்ளைக்குதிரை, தங்க மயில் வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். மார்ச் 16-ம் தேதி இரவு 7 மணியளவில் சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார லீலை நடைபெறும்.
முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் மார்ச் 17-ம் தேதி இரவு 7.15 மணிக்குமேல் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். மார்ச் 18-ம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பகல் 12.15 மணிக்கு மேல் 12.45 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். இவ்விழாவில் மதுரையிலிருந்து மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் பங்கேற்கின்றனர்.
மார்ச் 19-ம் தேதி காலை 6 மணி அளவில் கிரிவலப்பாதையில் பெரிய தேரோட்டம் நடைபெறும். மார்ச் 20ம் தேதி தீர்த்தபூஜையுடன் திருவிழா நிறைவுபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை ஆணையர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மத்தேவன், சண்முகசுந்தரம், ராமையா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT