Published : 03 Mar 2025 04:30 PM
Last Updated : 03 Mar 2025 04:30 PM
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று (மார்ச் 3) தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
அதிகாலை 3 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தது. கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் வைபவம் தொடங்கியது. அதிகாலை 5.20 மணிக்கு மேளதாளம் முழங்க முத்துகுமாரசுவாமி சிவாச்சாரியார் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு மஞ்சள், திரவியம், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்பு கொடிமரத்துக்கு தர்பபைபுல், பட்டு வஸ்திரங்கள், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 6.40 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதினம் சங்கரலிங்கம் தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், கண்காணிப்பாளர் அஜித், திருச்செந்தூர் நகராட்சி துணைதலைவர் செங்குழி ரமேஷ் உள்ளிட்ட திரராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்கசப்பரத்தில் எழுந்தளி வீதிகளில் உழவாரப்பணி செய்து கோயிலை சேர்ந்தார். இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகின்றன. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சிவன் கோயிலிருந்து சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 5-ம் திருவிழாவான 7-ம் தேதி மாலை 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவறைவாயில் தீபாராதனை நடைபெறுகிறது.
7-ம் திருவிழாவான 9-ம் தேதி மாலையில் சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8-ம் திருவிழாவான 10-ம் தேதி அதிகாலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகலில் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேருகின்றனர்.
10-ம் திருவிழாவான 12-ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. 11-ம் திருவிழாவான 13-ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 12-ம் திருவிழாவான 14-ம் தேதி மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் காலை முதல் மாலை வரை கோயில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT