Published : 28 Feb 2025 04:47 PM
Last Updated : 28 Feb 2025 04:47 PM
சென்னை: மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2024-25 ஆம் நிதியாண்டில் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வந்தவர்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் வழங்கப்படும் அரசு மானியத்தை பெற விண்ணப்பிக்கலாம்.
இந்து சமய அறநிலையத் துறை தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, இறையன்பர்கள் பயன்பெறும் வகையில் ஆன்மிகப் பயணங்களுக்கு அரசு மானியம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு கட்டணமில்லா ஆன்மிகப் பயணங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட தலா 500 நபர்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், மானசரோவர் சென்று வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.40,000-ஐ ரூ.50,000 -ஆகவும், முக்திநாத் சென்று வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.10,000-ஐ ரூ.20,000 -ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
2024-2025 ஆம் நிதியாண்டில் (01.04.2024 முதல் 31.03.2025 வரை) சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு முழுமையாக பயணம் முடித்து திரும்பிய, 18 வயதுக்கு மேல் 70 வயதுக்குட்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை www.tnhrce.gov.in என்ற இத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600034 என்ற முகவரிக்கு 30.04.2025 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிட வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் (www.tnhrce.gov.in) மூலம் தெரிந்து கொள்ளலாம். சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வந்த தகுதியுடையவர்கள் உரிய முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT