Published : 28 Feb 2025 07:24 AM
Last Updated : 28 Feb 2025 07:24 AM
விழுப்புரம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோயிலில் நேற்று நடந்த மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில் மாசி தேர்த் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.
காலை 10.30 மணிக்கு விஸ்வரூப காளியாக வடக்கு வாசல் வழியாக சிம்ம வாகனத்தில் மயானம் நோக்கி அம்மன் ஊர்வலமாக வர, வழி நெடுகிலும் கூடியிருந்த பக்தர்கள் நாணயங்கள், தங்கள் நிலத்தில் விளைந்த காய்கள், கனிகள், தானியங்கள் மற்றும் பலியிடு சேவல் ஆகியவற்றை சூரை விட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காலை 11 மணியளவில் மயானத்தில் அம்மன் எழுந்தருள, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி குவித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை பூசாரிகள் கொள்ளையிட, அங்காளம்மன் பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் செய்திருந்தனர். 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மயான கொள்ளை நிகழ்வுக்காக அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில், பல்வேறு ஊர்களில் இருந்து மேல்மலையனூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT