Last Updated : 27 Feb, 2025 04:16 PM

 

Published : 27 Feb 2025 04:16 PM
Last Updated : 27 Feb 2025 04:16 PM

ஜோலார்பேட்டை காசி விஸ்வநாதர் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ காட்சி: பக்தர்கள் பரவசம்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே மகா சிவராத்திரியை ஒட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது, சூரிய ஒளி காசி விஸ்வநாதர் மீது விழுந்ததை கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எம்.வட்டத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி நந்திகேசவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், மகா சிவராத்திரியை யொட்டி இங்கு ஆண்டு தோறும் ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கு 4 கால யாக பூஜை நடைபெறுகிறது. அதன்படி, நேற்று மகா சிவராத்திரியை யொட்டி காசி விஸ்வநாதருக்கு நேற்று தொடங்கி விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

முதல் கால பூஜை நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும், இரண்டாம் கால பூஜை இரவு 9.30 மணி முதல் இரவு 12.30 வரையும், மூன்றாம் கால பூஜை அதிகாலை 12‌.30 மணி முதல் 3.30 மணி வரையும், 4ம் கால பூஜை இன்று அதிகாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெற்றது. மகா சிவராத்திரியையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை 4-ம் கால பூஜை நடந்த போது காசி விஸ்வநாதர் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர் விழுந்தது. ஆண்டுக்கு ஒரு முறை காசி விஸ்வநாதர் மீது சூரிய ஒளிப்படும் அபூர்வ காட்சியானது காலை 7.28 மணி முதல் 7.33மணி வரை தொடர்ந்து 5 நிமிடம் நீடித்தது. இந்த 5 நிமிடம் சூரிய ஒளி காசி விஸ்வநாதரின் திருமேனி மீது கீழிருந்து மேல் நோக்கி சிவனை வணங்குவது போல் சூரிய ஒளி சிவன் மீது பட்டு மறைந்தது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வியப்புடன் கண்டுகளித்தனர்.

மேலும், சுவாமி மீது சூரிய ஒளிப்படும் அபூர்வ காட்சியை தங்களது கைபேசியில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். சூரிய பகவான், காசி விஸ்வநாதரை வணங்கும் அபூர்வ காட்சியை கண்டு அரோகரா என்று பக்தர்கள் முழங்கினர்.

சுவாமிமீது சூரிய ஒளிக்கதர் விழும் இந்த அபூர்வ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் நான்காம் கால பூஜை முடிவறும் நிலையில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பூஜையில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, குடியாத்தம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை யொட்டி கோயிலில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் கோயில் கோமாதாவுக்கு நேற்று சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x