Published : 27 Feb 2025 06:04 AM
Last Updated : 27 Feb 2025 06:04 AM

சென்னை கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள்.

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் உள்ள கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளான நேற்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்து சிவாலயங்களிலும் நான்குகால பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன. வடபழனி முருகன் கோயிலில் நான்குகால பூஜைகளுக்கு நடுவே விடிய விடிய சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கோடம்பாக்கம் புலியூர் வன்னியர் தெருவில் உள்ள தீர்க்கபுரீஸ்வரர் கோயிலில் மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், ஏகாதச ருத்ர ஜப பாராயணம், மகா அபிஷேகம், ருத்ர ஹோமம், வசோர்தரா ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை, ஏகாதச ருத்ராபிஷேகம், மகா தீபாராதனை, நான்கு கால அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

சென்னை கோடம்பாக்கம் பாலவிநாயகர், பாலமுருகன், சொர்ணாம்பிகை
சமேத தீர்க்கபுரீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை
முன்னிட்டு கலசம் வைத்து ருத்ர ஜபம் நடைபெற்றது.

கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 26-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழாவையொட்டி, மகா சிவராத்திரி பூஜை, சப்தகன்னி வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து இன்று பால்குடம் ஊர்வலம், அபிஷேக ஆராதனை, இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா புறப்பாடு, அதை தொடர்ந்து கும்பமிடுதல் நிகழ்வும் நடைபெறுகிறது. இதையடுத்து, 28-ம் தேதி ஊஞ்சல் சேவையும், மார்ச் 2-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் ஆர்.கே.மடம் சாலையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் மைதானத்தில் சிவாரத்திரி விழாவை அமைச்சர் சேகர்பாபு நேற்று மாலை தொடங்கி வைத்தார். இதில், வாய்ப்பாட்டு, தாளவாத்தியம், பக்திப் பாடல்கள், பரதநாட்டியம், சொற்பொழிவு, சிவ உபதேசம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு
பால் ஊற்றி வழிபட்ட பக்தர்கள். படங்கள்: ம.பிரபு

திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி, வேளச்சேரி தண்டீஸ்வரர், மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர், மாங்காடு வெள்ளீஸ்வரர், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் நான்குகால பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன. சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாதப்ரம்மம் இசை நாட்டிய கலை களஞ்சியம் சார்பில் ‘சிவன் ராத்திரியில் சிவன் கீதங்கள்’ எனும் 12 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி மேற்கு மாம்பலத்தில் நேற்று நடந்தது. இதில் மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குடந்தை லஷ்மணனுக்கு ‘நாத பதிக சேவகா’ விருது வழங்கினார். நிகழ்வில், நாதப்ரம்மம் நிறுவனர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், கவுரவ செயலாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x