Published : 23 Feb 2025 01:24 AM
Last Updated : 23 Feb 2025 01:24 AM

நாட்டை பலவீனமாக்க துரோகம் செய்தார்: ராகுல் காந்தி மீது பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டை தொடர்ந்து, அந்திய சக்திகளுடன் இணைந்து, ராகுல் நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார் என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த ரூ.182 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, முந்தைய பைடன் அரசு மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இது குறித்து காங்கிரஸ் கூறுகையில், அமெரிக்கா கொடுத்த நிதி வங்கதேசத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறியது.

இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: வங்கதேசத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்க நிதியுதவி பயன்படுத்தப்பட்டது என காங்கிரஸ் கூறுவது மூடிமறைக்கும் செயல். இந்தியாவுக்கு நிதியுதவி அளித்ததாக அமெரிக்க அதிபரே கூறியுள்ளார். அமெரிக்காவின் திறன் மேம்பாட்டுத்துறையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. சோனியா காந்தி குடும்பம் மீது பற்று உள்ளவர்கள் பொய்களை பரப்புகின்றனர்.

உள்நாட்டு அரசியலில் தலையிடுவதற்கு, அமெரிக்க நிதியுதவி இந்தியா வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2,000 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை இந்தியா வந்தது. மோடி ஆட்சி காலத்தில் 1.5 மில்லியன் டாலர்தான் வந்தது. ஏனென்றால் அந்நிய சக்திக்கு இந்தியாவையும், இந்திய நலன்களையும் மோடி விற்கமாட்டார் என்பதை அவர்கள் அறிவர்.

இந்திய அரக்கு நிதியுதவி அளிப்பது நிறுத்தப்பட்டபோது, தேர்தலை முன்னிட்டு மோடியை தோற்கடிக்கும் முயற்சியாக, ராகுலின் நடை பயணத்துக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி வருவது அதிகரித்தது. நாட்டை சீர்குலைப்பதுதான் ராகுல் யாத்திரையின் நோக்கம். இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சியாக அந்நிய சக்திகளுடன் ராகுல் காந்தி இணைந்து செயல்பட்டது துரோகச் செயல். இவ்வாறு கவுரவ் பாட்டியா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x