Published : 23 Feb 2025 01:19 AM
Last Updated : 23 Feb 2025 01:19 AM
கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 26-ம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன் வரும் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு மகாசிவராத்திரி விழா தொடங்கி, அடுத்த நாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஈஷா நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பங்கேற்கின்றனர். மேலும், ‘மிராக்கிள் ஆஃப் தி மைண்ட்’ எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார். தினமும் 7 நிமிடங்கள் சத்குருவின் வழிகாட்டுதலுடன் மக்கள் தியானம் செய்யும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
விழாவுக்கு முன்பதிவின்றி நேரடியாக வரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி விழா தமிழகத்தில் 50 இடங்கள், கேரளாவில் 25 இடங்கள் உட்பட நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. 150-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள், டிஜிட்டல் தளங்களிலும், இந்தியா முழுவதும் 100-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், ஜியோ ஹாட்ஸ்டார், ஓடிடி தளங்கள், வானொலிகளிலும் விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்யபிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய்-அதுல், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் முக்திதான் காத்வி, ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். ஈஷா தன்னார்வலர்கள் கணேஷ் ரவீந்தரன், சரவணன் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT